மின்சாரத்தை தொட்டால்தான் நமக்கு ஷாக் அடிக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக மின்கட்டணத்தை பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஷாக் அடிக்கின்றது. தொடாமலே ஷாக் அடிக்கும் அளவிற்கு என்ன உள்ளது என்கின்றீர்களா? உயர்ந்துள்ள மின்கட்டணங்கள் தான்.கரண்ட் எங்கே ஒழுங்காக வருகின்றது.. இதில் மின்கட்டணம் எவ்வளவு வந்துவிடபோகின்றது என கேட்கின்றீர்களா? 10 மணிநேரம் மின்தடை செய்து 14 மணிநேரம் மின்சாரம் மின்சார பயன்பாட்டிற்கு எவ்வளவு வந்துவிடப்போகின்றது என்கின்றீர்களா ? கீழே உள்ள கட்டண விகிதத்தை பாருங்கள். நெருக்கிய உறவினர் - நண்பர் திடீரென்று மறைந்துவிட்டால் நம்மால் அவரின் இழப்பை தாங்க முடியாது. ஆனால் அவர்களே உடல் நிலை சரியில்லை - தேறுவது கடினம் என தெரியவரும்போது நமது மனது தன்னால் அந்த துயரத்தை தாங்கிகொள்கின்றது. அதுபோல் உங்களுக்கான மின்கட்டணம் திடீரென்று அதிகமாக வந்துஉள்ளது என நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிட கூடாது என்கின்ற அக்கறையில் இந்த அட்டவணையை பதிவிடுகின்றேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் இது எம்மாத்திரம் என்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள்....இதுவும் கடந்துபோகும்..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
சரி கட்டண விவரம் பற்றி கீழே பார்க்கலாம்.
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)
இரண்டாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
மூன்றாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)
நான்காம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75.
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்தவேண்டும்)
கடைகளுக்கானது:-
1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.
100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிறகு 120 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
உங்களுக்கான அட்டவணை கீழே:-
வீடு இணைப்புக்கானது.
கடை இணைப்புக்கானது.
எனது கருத்து:-
நீங்கள் நான்கு ஸ்லாப்களில் (நிலைகள்)எந்த ஸ்லாப்பில் வருகின்றீர்களோ அதை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.உதாரணத்திற்கு நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் நீங்கள் 460.00 ரூபாய் செலுத்தவேண்டும்.. கூடுதல் 10 யூனிட்டுக்கு 140.00 ரூபாய் அதிகம் செலுத்தவேண்டும்.அப்போழுது உங்களுக்கு ஒரு யூனிட் விலை 14.00 ரூபாயாக மாறிவிடுகின்றது.உங்கள் மீட்டரில் 150 யூனிட் வரும் சமயம் முதல் சிக்கனத்தை கடைபிடியுங்கள். அவசியமில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி பணத்தை செலவழிக்காதீர்கள்.
தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.